Published : 25 Aug 2022 05:08 AM
Last Updated : 25 Aug 2022 05:08 AM
டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதனால் புகுஷிமா அணு மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அணு உலை பேரழிவாக இது அமைந்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி பல அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்நாட்டில் ஏற்கெனவே 33 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்த நிலையில், இப்போது 10 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் எரிசக்தி தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், எரிசக்தி இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், அதற்கான செலவு அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எரிசக்தி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா இக்கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஜப்பான் உட்பட உலக நாடுகளுக்கான எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, அணு மின் உற்பத்தித் துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, முடங்கிக் கிடக்கும் அணு உலைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருந்தால் அணு உலைகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதவிர, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அடுத்த தலைமுறை அணு உலைகளை நிறுவுவது குறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தினால்தான் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கமான முடிவு எடுக்க முடியும். இவ்வாறு கிஷிடா தெரிவித்தார்.
புகுஷிமா பேரழிவுக்கு முன்பு ஜப்பானின் மின் உற்பத்தியில் அணு மின் நிலையங்களின் பங்கு 33 சதவீதமாக இருந்தது. இது 2020-ல் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜப்பானில் மேலும் 7 அணு உலைகளில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கலாம் என தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT