Published : 24 Aug 2022 04:16 PM
Last Updated : 24 Aug 2022 04:16 PM
வாஷிங்டன்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்திலேயே பெரிய அளவிலான வியாழன் கோளை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி SMACS 0723 விண்மீன் திரள், தெற்கு வளைய நெபுலா, ஸ்டிபன்ஸ் குவின்டெட், கரினா நெபுலா ஆகியவற்றின் தெளிவான படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. இந்த நிலையில், வியாழன் கோளின் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி அனுப்பியுள்ளது.
நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோள் என்று அறியப்படும் வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த புகைப்படம் அறிவியல் உலகத்தை மீண்டும் ஆச்சரியத்தில அழ்த்தியுள்ளது. வியாழன் கோளின் வட மற்றும் தென் முனைகளில் அரோரா ஒளிகள் படர்ந்து காணப்படுகின்றன. வியாழனின் நிலவுகளையும் (வியாழன் கோளுக்கு மொத்தம் 79 நிலவுகள் உள்ளன), அதனைச் சுற்றியுள்ள வாயுகளையும், வளையங்களையும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த படத்தில் தெளிவாக தெரிகின்றன.
இதுகுறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கிரக வானியலாளர் இம்கே டி பேட்டர் கூறும்போது, “நாங்கள் இதுவரை வியாழனை இவ்வாறு பார்த்தது இல்லை. இது அற்புதமாக உள்ளது. உண்மையை கூற வேண்டும் என்றால், இந்த அளவு நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
ஜேம் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.
பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை மாதம் வெளியிட்டார். இந்தப் புகைப்படம் கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ. 75,000 கோடி செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. வாசிக்க > ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி? - ஒரு விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT