Last Updated : 08 Oct, 2016 02:01 PM

 

Published : 08 Oct 2016 02:01 PM
Last Updated : 08 Oct 2016 02:01 PM

‘மேத்யூ’ புயலுக்கு ஹைதியில் பலி எண்ணிக்கை 900-ஆக அதிகரிப்பு

மேத்யூ என்ற பயங்கர புயல் தாக்கிய ஹைதி நாட்டில் சுமார் 900 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

ஹைதியை அடுத்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்கிய மேத்யூ புயலுக்கு அப்பகுதியில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் புளோரிடாவை ஓரளவுக்கு விட்டு வைத்த மேத்யூ அடுத்ததாக கடற்கரை நகரங்களான சவனா, ஜார்ஜியா, சார்லஸ்டன், சவுத் கரோலினா, விமிங்டன் மற்றும் வடக்கு கரோலினா ஆகியவற்றை அச்சுறுத்த நகர்ந்துள்ளது.

ஏழை நாடான ஹைதி மேத்யூவின் சீற்றத்துக்கு சின்னாபின்னமாகியுள்ளது. அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை 877 ஆக இருக்கும் போது, புயலால் பாதிக்கப்பட்டு தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் செய்திகளில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

புளோரிடா, ஜார்ஜியா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதிகளில் மேத்யூ புயல் பாதிப்பினால் பெரிய அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஆலோசனைகளைக் கடைபிடிப்பதில் அலட்சியம் வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மக்களை எச்சரித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதிசக்தி சாண்டி புயலுக்குப் பிறகு அமெரிக்காவை அச்சுறுத்தும் புயல் மேத்யூ என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, “உயிரிழப்புகள், சொத்துகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும்” என்று ஒபாமா எச்சரித்துள்ளார்.

ஹைதியின் மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாயன்று மேத்யூ புயல் தாக்கியது. மணிக்கு 233 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பறந்தன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 61,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2010-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் அதனையடுத்த சுனாமி ஆகிய பாதிப்புகளிலிருந்தே இன்னும் முழுதாக வெளிவராத ஏழை நாடான ஹைதி இந்த புயலால் மேலும் பின்னடைவு கண்டுள்ளது.

ஹைதியின் பாதிப்பு நிச்சயம் மீண்டும் புவிவெப்பமடைதல் விவாதத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவி வெப்பமடைதலால் கடல்நீர்மட்டம் கடுமையாக அதிகரித்து கடற்கரை நகரங்கள், தீவுகளை பெரிய புயல்கள் விழுங்கும் அபாயம் பற்றிய ஒரு பெரிய விவாதம் காத்திருக்கிறது.

மேத்யூ புயல் காற்று அதன் தீவிரநிலையில் இருந்த போது நமக்கருகே ஜெட் விமானம் ஒன்று பறப்பது போன்ற பேரொலி கிளம்பியதாக புளோரிடா மாகாண குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x