Published : 23 Aug 2022 05:57 AM
Last Updated : 23 Aug 2022 05:57 AM

பழிவாங்க இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் - ஐ.எஸ். தீவிரவாதி ரஷ்யாவில் கைது

மாஸ்கோ: இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உயரிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ரஷ்யாவில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, கடந்த 2014-ம் ஆண்டில்சிரியா, இராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இராக்கில் முகாமிட்ட அமெரிக்க ராணுவம், சிரியாவில் களமிறங்கிய ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகளால் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. எனினும் இராக், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அந்த அமைப்பு ஆழமாக காலூன்றி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ‘விலயா ஆப் ஹிந்த்' என்ற பெயரில் இந்திய துணை கண்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கால் பதித்தது. இந்த அமைப்பு இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மிரட்டல் வீடியோ

பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த மே மாதம் முகமது நபி குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கண்ணையா லால், மகாராஷ்டிராவின் அமராவதியை சேர்ந்த மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்ட வீடியோவில், ‘‘முகமது நபி குறித்து அவதூறாக பேசியதற்கு பழிவாங்குவோம். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவோம். விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம்’’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உயரிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதியை ரஷ்யாவின் எப்எஸ்பி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ரஷ்ய போலீஸார் அறிக்கை

இதுகுறித்து எப்எஸ்பி போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளோம். அவர் மத்திய ஆசிய பகுதியை சேர்ந்தவர். இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய அவர் சதித் திட்டம் தீட்டியிருந்தார்.

துருக்கியை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர், கடந்த ஏப்ரல்முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்த தற்கொலைப்படைதீவிரவாதிக்கு நேரிலும் ஆன்லைனிலும் பயிற்சி அளித்து தயார்செய்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதி வாக்குமூலம் வீடியோ

பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி வாக்குமூலம் அளித்த வீடியோவையும் எப்எஸ்பி போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் தீவிரவாதியின் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்ய மொழியில் தீவிரவாதி கூறியிருப்பதாவது:

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் வந்தேன். இங்கிருந்து இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். எனக்கு தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் இந்தியாவுக்கு செல்வதாக இருந்தது. இந்தியாவுக்கு சென்ற பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகமது நபியை அவதூறாக பேசியதற்கு பழிவாங்க இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஒப்புக் கொண்டேன். இதுதொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் மீது உறுதிமொழியும் எடுத்துக் கொண்டேன். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி கைது தொடர்பாக இந்திய உளவுத்துறையினர் ரஷ்யாவின் எப்எஸ்பி போலீஸாருடன் தொடர்பில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஐஎஸ்தீவிரவாதியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் பலர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x