Published : 21 Aug 2022 07:25 AM
Last Updated : 21 Aug 2022 07:25 AM

இரவு விடுதியில் நடனமாடிய விவகாரம் - பின்லாந்து பிரதமர் சானா மேரின் போதை மருந்து சோதனை

சானா மேரின்

ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமர் சானா மேரின்(36) இரவு விடுதியில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு போதை மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு ஐரோப்பாவில் பின்லாந்து அமைந்துள்ளது. அந்த நாட்டில் 55.3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2019 டிசம்பர் 10-ம் தேதி பின்லாந்தின் 46-வது பிரதமராக சானா மேரின் பதவியேற்றார்.

விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை தொடங்கிய அவர் மிக இளம் வயதிலேயே நாட்டின் பிரதமராக உயர்ந்தார். கடந்த 2020 ஆகஸ்டில் மார்கஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளில் பின்லாந்தை திறம்பட வழிநடத்தியவர் என்று சானா மேரினுக்கு ஐரோப்பிய ஊடகங்கள் புகழாரம் சூட்டி வந்தன.

இந்த சூழலில், இரவு விடுதியில் அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பின்லாந்து பாப் பாடகர் ஒலாவியுடன் பிரதமர் சானா மேரின் நெருக்கமாக நடனமாடுகிறார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, "நான் இளைய தலைமுறையை சேர்ந்தவள். கேளிக்கை விருந்தில் பங்கேற்றது உண்மை. மதுபானம் அருந்தி நடனமாடியதும் உண்மை. இவை சட்டப்பூர்வமானவை. போதை மருந்து எதையும் நான் உட்கொள்ளவில்லை" என்று விளக்கமளித்தார்.

அரசியல் எதிர்காலம்?

எனினும் எதிர்க்கட்சி தலைவர்கள், அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும், பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்தன. இதைத் தொடர்ந்து போதை மருந்து சோதனைக்கு அவர் தாமாக முன்வந்தார். அவருக்கு நேற்று போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு ஒரு வாரத்தில் தெரியவரும். இந்த முடிவின் அடிப்படையில் சானா மேரினின் அரசியல் எதிர்காலம் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x