Published : 20 Aug 2022 03:40 PM
Last Updated : 20 Aug 2022 03:40 PM
வாஷிங்டன்: சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக, நியூயார்க்கில் பிர்ம்மாண்ட பேரணி நடைபெற்றது.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி, நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டி மீது கத்தியால் குத்தினார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்களுக்குப் பின்னர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது.
இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஹாதி மட்டர் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் உள்ள பொது நூலகத்தின் அருகே, சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் எழுத்தாளர்கள் மற்றும் பிரபலங்களான பால் ஆஸ்டர், கே டேலிஸ், ஜெஃப்ரி யூஜெனைட்ஸ் மற்றும் கிரண் தேசாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்
பேரணியில் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கூடியிருந்தவர்கள் குரல்கள் எழுப்பினர்.
பேரணி குறித்து சல்மான் ருஷ்டியின் மகன் ஜாஃபர் பேசும்போது, “என் தந்தைக்கு ஆதரவாக இவ்வளவு நபர்கள் இங்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.
ஏன் தாக்குதல்? சல்மான் ருஷ்டி எழுதிய 'சாட்டனிக் வெர்சஸ்' என்ற புத்தகத்திற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் தடை விதித்துள்ளன. முஸ்லிம்களை, இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிக்கும் கருத்துகளை அப்புத்தகத்தில் எழுதியதாகக் கூறி சல்மான் தலைக்கு ஈரான் அரசு விலை நிர்ணயித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவாகவே இருந்த சல்மான் கடந்த 2010க்குப் பின்னர் சகஜமாக நடமாடிவந்தார். இந்நிலையில் தான் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட ஹதிஸ் மட்டருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஈரான் கைவிரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT