Published : 18 Aug 2022 04:12 PM
Last Updated : 18 Aug 2022 04:12 PM

10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு’ மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று புதின் அறிவித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் (அப்போதைய ரஷ்யா) அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் யூனியனால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர்.

1992 ஆம் ஆண்டு சோவித் யூனியன் வீழ்ந்தபிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இதே அறிவிப்பை தற்போது ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் அறிவித்திருக்கிறார். ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும் அதுவும் குறிப்பாக கரோனா, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் மேலும் குறைந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை ஈடு செய்யவே இந்த அறிவிப்பை புதின் அறிவித்திருக்கிறார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டுள்ள ஆணையில், “ ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் ( இந்திய மதிப்பில் 13 லட்சம்) பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.

தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இவ்விருது கிடைக்கும். போர், தீவிரவாத செயல், உடல் நலக்குறைவு, விபத்து சூழல் காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

புதினின் இந்த அறிவிப்பை சர்வதேச பெண்கள் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x