Published : 24 Oct 2016 04:22 PM
Last Updated : 24 Oct 2016 04:22 PM
ஐஎஸ் காட்டுப்பாட்டிலுள்ள மொசூல் நகரை மீட்க, தங்கள் படைகளும் இணைந்துள்ளதாக துருக்கி அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இராக்கில் ஐஎஸ் கட்டுபாட்டிலுள்ள மொசூல் நகரை மீட்க அந்நாட்டு அரசுப் படைகள் கடந்த ஒரு வாரமாக கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பகுதிகள் இராக் அரசுப் படைகளின் வசம் வந்துள்ளது.
இந்த நிலையில், மொசூலிலிருந்து ஐஎஸ் அமைப்பை விரட்ட இராக் படைகளுடன் தங்கள் படைகளும் பீரங்கி, கனரக ஆயுதங்கள் கொண்டு சண்டையிட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் வெளியிட்ட செய்தியில், "மொசூல் நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பை வெளியேற்றும் முயற்சியில் துருக்கிப் படைகள் இணைவதற்கு இராக் மறுத்த போதிலும், துருக்கிப் படைகள் மொசூல் நகரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாஷிகா நகரில் ஐஎஸ் அமைப்பை வெளியேற்ற உதவின" என்று கூறப்பட்டுள்ளது.
கிர்குக் பகுதியில் 74 ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை
கிர்குக் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இராக் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 74 பேர் கொல்லப்பட்டதாக கிர்குக் நகரின் ஆளுநர் தெரிவித்தார்.
முன்னதாக, இராக்கின் பெரிய நகரமான மொசூல், கடந்த 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.
இதனைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்புக்கும், இராக் அரசுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள மொசூல் நகரை மீட்க போர் தொடங்குவதாக இராக் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT