Published : 17 Aug 2022 06:22 AM
Last Updated : 17 Aug 2022 06:22 AM
நியூயார்க்: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ்பெற்ற ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 6 வெவ்வேறு அணுசக்தி போர் சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேச்சர் ஃபுட் இதழில் அந்த ஆய்வு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான அணு ஆயுத மோதல் நடந்தால், மனிதகுலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அது அழித்துவிடும். அதாவது சுமார் 500 கோடி மக்கள் அந்த போரில் கொல்லப்படுவர்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முழு அளவிலான அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் அது உலகளாவிய பஞ்சத்துக்கு வழிவகுக்கும். அணுசக்தி போர், காலநிலை மாற்றத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஓசோன் படலமும் அழிந்துவிடும்.
சிறிய அளவிலான மோதல் கூட உலகளாவிய உணவு உற்பத்தியில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளூர்மயமாக்கப்பட்ட போரில் பயிர் விளைச்சல் 5 ஆண்டுகளுக்குள் 7% குறையும். அதே நேரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே போர் ஏற்பட்டால் 3 முதல் 4 ஆண்டுகளில் உற்பத்தி 90% குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் இணை ஆசிரியரும், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் காலநிலை அறிவியல் பேராசிரியருமான ஆலன் ரோபோக் கூறும்போது, “உலகில் ஒரு அணுசக்தி போர் நடக்காமல் நாம் தடுக்க வேண்டும். அதைத் தான் இந்த ஆய்வு முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT