Published : 14 Aug 2022 05:19 AM
Last Updated : 14 Aug 2022 05:19 AM
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (38). கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். அந்த நிறுவனங்களில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டில் எவ்வித முதலீடும் இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார்.
இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில். “கடைக்கு செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை என்றால் என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன்” என பதிவிட்டார்.
இதைப் பார்த்த பொதுமக்களில் பலர், ஷோஜி மோரிமோட்டாவை வாடகைக்கு முன்பதிவு செய்தனர். முதலில் குறைவான தொகையை வசூலித்த அவர் தற்போது ஒரு நாளைக்கு ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்.
இதுகுறித்து ஷோஜி கூறியதாவது: ஜப்பானில் கரோனா காலத்தில் மட்டும் தனிமையினால் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். மக்களின் தனிமையை போக்க என்னை நானே வாடகைக்கு விடத் தொடங்கினேன். இப்போது டோக்கியோ முழுவதும் பிரபலமாகிவிட்டேன். ‘மிஸ்டர் வாடகை' என்றே மக்கள் அழைக்கின்றனர்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது முதலாளிகள், அதிகாரிகளின் அடக்குமுறைகளில் சிக்கித் தவித்தேன். இப்போது என்னை கேள்வி கேட்பதற்குயாரும் கிடையாது. இதுவரை பல ஆயிரம் பேர் என்னை வாடகைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
கடினமான வேலை நிராகரிப்பு
வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், பொருட்களை தூக்க வேண்டும்என்று அழைத்தால் அவர்களோடு செல்ல மாட்டேன். பாலியல் ரீதியாக அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன். வாடிக்கையாளர்களோடு பொழுதை கழிக்க மட்டுமே செல்வேன். அவர்களின் மனக்குறைகளை என்னிடம் கூறுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT