Published : 14 Aug 2022 05:04 AM
Last Updated : 14 Aug 2022 05:04 AM

சொத்துகளை முடக்கினால் உறவை முறித்து கொள்வோம் - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவின் சொத்துகளை அமெரிக்கா முடக்கும்பட்சத்தில் அந்த நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள ரஷ்யா தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்த நாட்டின் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு கடந்த பிப்ரவரி 24-ல் உத்தரவிட்டது. இதையடுத்து, ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்த போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இதுதொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய-உக்ரைன் பிரச்சினையில் எந்தெவொரு நாட்டின்தலையீட்டையும் ரஷ்யா விரும்பவில்லை.

ரஷ்யர்களின் சொத்துகள் அமெரிக்காவால் முடக்கப்படுமானால் அது இருதரப்பு உறவைமுற்றிலும் நிரந்தரமாக அழித்துவிடும். மேலும், இதுபோன்ற செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x