Published : 13 Aug 2022 01:17 AM
Last Updated : 13 Aug 2022 01:17 AM
செட்டின்ஜே: தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொண்டெனேகுரோ நாட்டின் தலைநகர் போட்கோரிகாவிற்கு மேற்கே 36 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள செட்டின்ஜே என்ற இடத்தில் தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அட்ரியாடிக் கடல் பகுதியை ஒட்டிய நாடான மொண்டெனேகுரோவில் கடந்த தசாப்தத்தில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இது எனக் கூறப்படுகிறது. 34 வயது மதிக்கத்தக்க நபர் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். முதல்கட்ட தகவலின்படி, குடும்ப பிரச்சினை காரணமாக அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு தெருவில் நடந்து சென்றவர்கள் உட்பட தனது கண்ணில்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மொண்டெனேகுரோ காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான அழகிய மலைகள் மற்றும் கடற்கரைகளுக்கு புகழ் பெற்றது மொண்டெனேகுரோ நாடு. சுற்றுலா பிரதான தொழிலாக அந்நாடு கொண்டுள்ளது. தற்போது அந்நாட்டில் சுற்றுலா சீசன். இந்தநிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அந்த நாட்டில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT