Published : 04 Oct 2016 05:24 PM
Last Updated : 04 Oct 2016 05:24 PM
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இனி பயனர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க - விற்க புதிய அம்சம் அறிமுகப்படுத்துப்படவுள்ளது. மார்க்கெட் ப்ளேஸ் (Marketplace) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்கள் அதிகமாகி, இணையத்தில் ஷாப்பிங் செய்யும் பழக்கமும் பன்மடங்கு பெருகி வரும் நிலையில், சூழலுக்கு ஏற்றவாரு பேஸ்புக்கும் தனது தளத்தில் ஷாப்பிங் செய்வதற்கான வசதியை செய்துள்ளது.
அடுத்த சில நாட்களில், இந்த அம்சம் அமெரிக்க, பிரிட்டைன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில், 18 வயதுக்கு அதிகமான பயனர்கள் பயன்படுத்துமாறு அறிமுகப்படுத்தப்படும். முதலில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் இருக்கும் பேஸ்புக் செயலியில் இந்த வசதியை பெற முடியும். அடுத்த சில மாதங்களில் டெஸ்க்டாப் பயனர்களுக்கான வடிவம் அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக இயக்குநர் மேரி கு அறிவித்துள்ளார்.
புதிய மற்றும் பயன்படுத்திய பொருட்களை வாங்க, விற்க ஏற்கனவே பேஸ்புக்கில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்களை நிர்வாகிக்க சில பயனர்கள் இருப்பார்கள். ஏறத்தாழ 45 கோடி மக்கள் பேஸ்புக்கில் இப்படியான குழுக்களில் இயங்கி வருகின்றனர் என பேஸ்புக்கின் ஆய்வில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, தனிக் குழுக்களாக இல்லாமல், பொது தளமாக, இந்த சந்தை வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமான இ-காமர்ஸ் தளங்களின் வடிவம் மற்றும் பயன்பாட்டை போலவே மார்கெட்ப்ளேஸும் இருக்கும் எனத் தெரிகிறது. எனவே ஆன்லைன் ஷாப்பிங்கில் அனுபவம் உள்ள பயனர்கள் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும். மேலும், பொருட்களை விற்கும் பயனர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டும் தேவையான பொருளை வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT