Published : 06 Aug 2022 03:24 PM
Last Updated : 06 Aug 2022 03:24 PM
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது.
பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசாவின் மையப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தைசிர் அல் - ஜபரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்.
இதில் துயரமான செய்தி என்றால், அலா குதும் என்ற சிறுமியும், அவளது தந்தையும் அருகில் கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் பேசும்போது, ”சிறுமியின் தாய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் குழந்தையையும் கணவரையும் அவர் இழந்திருக்கிறார். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். 5 வயதாகும் அந்த அப்பாவிச் சிறுமி இப்படி கொல்லப்பட என்ன செய்தார்?” என்று கேள்வி எழுப்பினர்.
தாக்குதலைக் கண்ட ஒருவர் கூறும்போது, “மதிய உணவு சப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தோம். குழந்தைகள் சாலைகளில் விளையாடி கொண்டிருந்தன. தாக்குதல் சத்தம் கேட்டு நாங்கள் பயந்து போனோம். அங்கிருந்து தப்பித்துட ஓடிவிட்டோம்” என்றார்.
கடந்த மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் உருவாகியது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்த நிலையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதலின் வரலாற்றை தெரிந்தகொள்ள: பூமியின் ’நரகம்’ காசா - உக்ரைன் குண்டுச் சத்தங்களுக்கு இடையே பாலஸ்தீனர்களின் குரலையும் கேளுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT