Published : 06 Aug 2022 01:30 PM
Last Updated : 06 Aug 2022 01:30 PM
தைபே: எல்லைக் கடற்கரை பகுதிகளில் சீனாவின் போர் கப்பல்கள், விமானங்கள் நின்று கொண்டிருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா - சீனா இடையே நடைபெறவிருந்த சந்திப்பையும், பாதுகாப்பு தொடர்பாக நடைபெறவிருந்த ராணுவத் தலைவர்களின் சந்திப்பையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. மேலும், நான்சி பெலோசி மீதும் பொருளாதாரத் தடையையும் சீனா விதித்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து தைவானின் எல்லையோரத்தில் மூன்றாவது நாளாக சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “தைவானின் கடற்பகுதியில் இன்று (சனிக்கிழமை) சீனாவின் போர்க் கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு கூட சீன ராணுவம் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டது. சீனாவின் 7 ட்ரோன்கள் கின்மின் தீவுப் பகுதிகளில் வலம் வந்தன” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த போர் ஒத்திகை ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT