Published : 05 Aug 2022 06:42 AM
Last Updated : 05 Aug 2022 06:42 AM

இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது சீன ஆய்வு கப்பல் - தீவிரமாக கண்காணிக்கிறது இந்தியா

புதுடெல்லி: சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வருவதை, தீவிரமாக கண்காணிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்த கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் தங்குகிறது.

இதுகுறித்து இலங்கை ராணுவஅமைச்சக செய்தி தொடர்பாளர் கர்னல் நலின் ஹெராத் கூறுகையில், ‘‘இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மலேசியா கடற்படை கப்பல்கள் அவ்வப்போது அம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் மற்றும் இதர பொருட்களை நிரப்பிக் கொள்ள அனுமதி கேட்கும். அதுபோல் சீனாவின் யுவான் வாங்-5 கப்பலுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்.

அணுசக்தி போர்க் கப்பலுக்குத்தான் நாங்கள் அனுமதி மறுக்கமுடியும். இது அணு சக்தி கப்பல் அல்ல. இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நேவிகேஷன் பணிக்காக இந்தகப்பலை அனுப்புவதாக இலங்கையிடம் சீனா தெரிவித்துள்ளது. இந்த கப்பலின் வருகை குறித்து இந்தியா கவலைப்படுவதை இலங்கை புரிந்து கொள்கிறது. ஆனால் இது வழக்கமான நடைமுறை.’’ என்றார்.

இந்த கப்பலின் வருகையை, மிக உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு இரு நீர்மூழ்கி கப்பல்களை சீனா, இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x