Published : 04 Aug 2022 03:40 PM
Last Updated : 04 Aug 2022 03:40 PM

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சவுதி சகோதரிகளின் மர்ம மரணமும் விசாரணையும்

சிட்னி: சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகள். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஜூன் 7-ல் இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி போலீஸார் தவித்து வந்தனர். அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று போலீஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.

புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

போலீஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சவுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x