Published : 03 Aug 2022 04:23 AM
Last Updated : 03 Aug 2022 04:23 AM
காபூல் / வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் தலைமைப்பொறுப்பை ஏற்ற அய்மான் அல்-ஜவாஹிரி (71), கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அல்-காய்தாவின் புதிய தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார்.
கடந்த 2001 செப். 11-ல் அமெரிக்காவில் அல்-காய்தா நடத்திய தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஒருங்கிணைப்பதில் அல்-ஜவாஹிரி உதவியுள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரான ஜவாஹிரியின் தலைக்கு அமெரிக்கா 2.50 கோடி டாலர் வெகுமதி அறிவித்தது.
2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. இதன்பிறகு ஜவாஹிரி தனது பெரும்பாலான நேரத்தை, ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம், மூசா கலா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில் காபூல் நகருக்கு ஜவாஹிரி மாறினார். காபூல் நகரில் தலிபான் உயரதிகாரிகள் வசிக்கும் ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பான ஒரு வீட்டில் அவர் வசித்து வந்தார்.
பால்கனி வந்தபோது தாக்குதல்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் தனது வீட்டின் பால்கனிக்கு வந்தபோது, அமெரிக்க ட்ரோன் ஒன்றின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அல்-ஜவாஹிரியின் குடும்பத்தினரை அமெரிக்க அதிகாரிகள் முதலில் அடையாளம் கண்டுள்ளனர். அதன் பிறகு அல்-ஜவாஹிரியை அவரது வீட்டின் பால்கனியில் பலமுறை அடையாளம் கண்ட அதிகாரிகள் இறுதியில் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
2011-ல் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கொன்றது போலவே மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ட்ரோன் தாக்குதலில் அப்பாவிகள் யாரும் கொல்லப்படவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. அந்த தீவிரவாத தலைவர் (அல் ஜவாஹிரி) இப்போது உயிருடன் இல்லை. எவ்வளவு காலம் ஆனாலும் நீங்கள் எங்கு பதுங்கியிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து வெளியே அழைத்து வரும். கென்யா மற்றும் தான்சானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்களில் ஜவாஹிரி முக்கியப் பங்கு வகித்துள்ளார்” என்றார்.
காபூலின் ஷெர்பூர் பகுதியில் ஒரு வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தலிபான்கள் உறுதிசெய்துள்ளனர். ஆனால் எவரும் உயிரிழக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
ட்ரோன் தாக்குதலுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமெரிக்க மக்கள், அமெரிக்க நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஜவாஹிரி தீவிர அச்சுறுத்தலாக இருந்தார். அவரது மரணம் அல்-காய்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அக்குழுவின் செயல்படும் திறனை குறைக்கும்” என்றார்.
ஜவாஹிரி கொல்லப்பட்டதை தொடர்ந்து அல்-காய்தாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் சைஃப் அல்-அடெல், அப்தல்-ரஹ்மான் அல்-மக்ரபி, அல்-காய்தாவின் இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் யாசித் மெப்ரக், அல்-ஷபாப் அமைப்பின் அகமது டிரியே ஆகியோர் அடுத்த வரிசையில் உள்ளனர். ஆனால் தெளிவான வாரிசுத் திட்டம் அவர்களிடம் இதுவரை இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT