Published : 29 Jul 2022 08:32 PM
Last Updated : 29 Jul 2022 08:32 PM
ஜெனீவா: சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை உலக நாடுகள் மிகவும் தீவிர பிரச்சினையாகப் பார்த்து வருகின்றன. காற்று மாசு காரணமாக மனிதர்களின் வாழ்நாள் குறைந்துகொண்டே வருவதாக ஆய்வு முடிகள் கூறுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இலக்கு வைத்து கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓர் எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.நா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமை என்று தெரிவித்தது. கோஸ்டா ரிக்கா, மாலத்தீவு, மொராக்கோ, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை 43 நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்த ஒரு மனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் கடந்த வாரம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தற்கு 161 நாடுகள் ஆதரவு அளித்தன. ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா கூட்டமைப்பு உள்ளிட்ட நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானத்தின்படி சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்த தீர்மானத்தின்படி ஐநா சபை உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை தடுத்து சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலிலை எற்படுத்தி கொடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT