Published : 27 Jul 2022 06:05 AM
Last Updated : 27 Jul 2022 06:05 AM
வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்தபோதிலும், இந்தியாவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடான அமெரிக்காவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சர்வதேச செய்தி நிறுவனமான ‘புளூம்பெர்க்’ பல நாடுகளில் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 85 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை இந்நிலை நீடிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை ஸ்திரப்படுத்தும் முயற்சியை ரிசர்வ் வங்கி உறுதியாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக ரூபாயிலேயே ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுதவிர பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால் இந்தியாவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு பூஜ்ய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தேக்க நிலைக்கான வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த பொருளதார நாடாகத் திகழும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவீத அளவுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணவீக்க விகிதம் கடந்த மே மாதத்தில் முன்னெப்போதையும் விட அதிகமாக 8.6 சதவீதத்தை தொட்டுள்ளது. இது 40 ஆண்டுகளில் எட்டப்படாத அதிகபட்ச அளவாகும்.
சீனா, தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தேக்கநிலை ஏற்படுவதற்கு 20 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகவும், நியூஸிலாந்துக்கு 33 சதவீத வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் தேக்கநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 25 சதவீத அளவுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வாய்ப்பு 55 சதவீதம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT