Published : 17 Jul 2022 06:38 AM
Last Updated : 17 Jul 2022 06:38 AM

இயற்கை எரிவாயு குழாய் நிரந்தரமாக மூடப்படுமா? - ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம்

மாஸ்கோ: ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பின்னர், குளிர் காலத்துக்கான சேமிப்பு தங்களிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் ஜெர்மனியில் தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீடித்து வரும் உக்ரைன் போர் காரணமாக கடந்த வாரம் முதல் எரிபொருட்களின் விலை உயர்ந்து, இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.

மேலும் ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சினை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரியை பயன்படுத்த முனைந்துள்ளன.

அச்சுறுத்தலாக உள்ளது

இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது. நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என அந்நாட்டின் எரிசக்தி, ஆற்றல்துறை அமைச்சர் ராபர்ட் ஹாபெக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு பைப்லைனை முழுமையாக மூடியுள்ளது ரஷ்யா.

ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை நீடிக்கும் இந்த பைப்லைன் வழக்கமாக ஜூலை 11-ம் தேதி ஆண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்படும். 10 நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னர் இந்த பைப்லைன் மீண்டும் திறக்கப்பட்டு இயற்கை எரிவாயு சப்ளை தொடரும். ஆனால் இந்தமுறை அந்த பைப்லைனை திறக்கப்போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இம்முறை பகுதியாகவோ அல்லது நிரந்தரமாகவோ இந்த பைப்லைன் மூடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ரஷ்யா அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்த குளிர்காலத்தில் ஜெர்மனியில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜெர்மனிக்கு பைப்லைன் வழியாக இயற்கை எரிவாயுவை சப்ளை செய்யும் கேஸ்பிரோம் நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் இருந்து எரிவாயுவை உற்பத்தி செய்து அனுப்பும் இயந்திரத்தை சீமென்ஸ் நிறுவனம் கொண்டு வர அனுமதிக்கும் ஒரு ஆவணம் கேஸ்புரோம் நிறுவனத்திடம் இல்லை.

எனவே, ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயுவை அனுப்பும் நார்ட் ஸ்ட்ரீம்-1 பைப்லைன் வழியாக மீண்டும் எரிவாயுவை அனுப்புவதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

உடனே முடிவு எடுக்க முடியாது

இந்த சூழ்நிலையில், நார்ட் ஸ்ட்ரீம்-1 எரிவாயு பைப்லைன் செல்லும் போர்ட்டோவாயா பகுதியில் அமைந்துள்ள காஸ் பைப்லைன் ஆலை வழியாக பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எனவே, இந்தத் திட்டத்தில் உடனடியாக முடிவை எங்களால் எடுக்க முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜெர்மனிக்கு அனுப்பப்படும் இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்தை ரஷ்யா குறைத்தது. கனடாவிலிருந்து வரவேண்டிய இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் காஸ் டர்பைன் கருவி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஜெர்மனிக்கு அனுப்பும் இயற்கை எரிவாயுவை குறைத்தோம் என்று ரஷ்யா அதற்கு காரணம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x