Published : 14 May 2016 02:34 PM
Last Updated : 14 May 2016 02:34 PM
பாக்தாத் வடக்குப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஸ்பானிய கால்பந்து கிளப்பான ரியால் மேட்ரிட் அணியின் கால்பந்து ரசிகர்கள் 14 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ரியால் மேட்ரிட் அணியின் பழைய போட்டிகளின் வீடியோ பதிவைக் காண ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிலர் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் விடுதியில் நுழைந்து தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தினர், என்று மேட்ரிட் ஆதரவாளர்கள் கிளப் தலைவர் ஜியாத் சுபான் டெய்லி மெயில் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
அதாவது கால்பந்தாட்டம் இஸ்லாமுக்கு ஒவ்வாதது என்று அவர்கள் கருதியதே இந்த படுகொலைக்குக் காரணம் என்று ரியால் மேட்ரிட் ஆதரவாளர்கள் கழக தலைவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவர் மக்கள் கையில் சிக்கியதாகவும் அவரை மக்கள் எரித்துக் கொன்றனர் என்றும் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
மக்களால் எரித்துக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் துப்பாக்கி சூடு நடத்திய கஃபேவுக்கு வெளியே கம்பத்தில் தலைகீழாகத் தொங்கிய நிலையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
கால்பந்தாட்டம், கால்பந்து வீரர்கள், ரசிகர்களைக் குறிவைத்து நடத்தப்படும் முதல் தாக்குதல் அல்ல இது. கடந்த மார்ச் மாதம் பாக்தாத் தெற்குப்பகுதியில் இளையோர் கால்பந்து போட்டி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியாகி 71 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT