Published : 14 Jul 2022 05:52 PM
Last Updated : 14 Jul 2022 05:52 PM
கொழும்பு: கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, நாடு இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவேவின் அதிபர் மாளிகையில் நுழைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்.
கடந்த சில நாட்களாக அதிபர் மாளிகையிலே போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தனர், கூட்டாக சமைத்து சாப்பிட்டனர். அதிபர் மாளிகையில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்களின் வீடியோக்கள் நாளும் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கும் எதிர்ப்பு வலுத்த நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதுவரை அவரது ராஜினாமா குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் இலங்கை அதிபர் மாளிகையில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் அமைதியாக இன்று வெளியேறினர்.
“கோத்தபய ராஜபக்சவை அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது நடந்துள்ளதால் நாங்கள் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறுகிறோம்” என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “நாங்கள் அதிபர் மாளிகையிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அமைதியாக வெளியேறுகிறோம்.தொடர்ந்து எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபரான ஜிஹான் மார்டின் கூறும்போது, “கோத்தபய ராஜபக்ச ஒரு கோழை. அவர் குடும்பத்துடன் சேர்ந்து இந்த நாட்டை அழித்துவிட்டார். நாங்கள் அவரை நம்பபோவதில்லை. புதிய அரசு உருவாக வேண்டும்” என்றார்.
போராட்டாக்காரர்களுக்கு ஆதரவளித்த இலங்கை மதத் தலைவர்களில் ஒருவரான ஒமல்பே சோபிதா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது. "இந்த கட்டிடம் ஒரு தேசிய பொக்கிஷம், இது பாதுகாக்கப்பட வேண்டும். இதனை அரசுக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இலங்கையில் நேற்று அறிவிக்கப்பட்ட அவசர பிரகடனம் இன்று காலை முதல் நீக்கப்பட்டது. எனினும், தலைநகர் கொழும்புவில் கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT