Published : 13 Jul 2022 04:34 PM
Last Updated : 13 Jul 2022 04:34 PM

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு

கோத்தபய ராஜபக்ச: கோப்புப் படம்

மாலே: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இருக்கும் விவரத்தை வெளியிட மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால் அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சவும், அவரது உறவினர்களும் திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர். மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாடாளுமன்ற சபாநாயகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன காணொலி மூலம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதிபர் கோத்தபய ராஜபக்ச என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ராஜினாமா கடிதத்தை இன்று பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதாக கூறினார்.

எதிர்வரும் 20ஆம் தேதி புதிய அதிபரை நியமிப்பதற்கு நாம் வகுத்துள்ள நாடாளுமன்ற செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் இருக்கிறாரா என்ற விவரத்தை வெளியிட அந்நாடு மறுத்து விட்டது. கொழும்பின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ராணுவ விமானத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாட்டிற்கு வந்தது குறித்து கருத்து தெரிவிக்க மாலதத்தீவு வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x