Published : 12 Jul 2022 06:05 AM
Last Updated : 12 Jul 2022 06:05 AM
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் 20-ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்று அந்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட் டுக்குத் தப்பியோட முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்கு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர். மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.
அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பு ஏற்றார். என்றாலும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் 3 நாட்களுக்கு முன்பு கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து மாளிகையை அவர்கள் கைப்பற்றினர். அதைப் போலவே அதிபரின் அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மக்கள் ஆக்ரோஷத்துடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை காலி செய்து விட்டு தப்பி ஓடினார்.
கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே அதிபர் ராஜபக்ச வெளிநாட்டுக்குத் தப்பியோட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொழும்பு சர்வதேச விமானநிலையம் அருகேயுள்ள கடற்படைத் தளத்தில் மறைந்திருக்கும் அவர் தனி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்ப முயற்சிசெய்து வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு தப்பிச் செல்லவுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் பிரதமர் ரணிலும் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். அவரும் வரும் 13-ம் தேதி (நாளை) ராஜினாமா செய்யவுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்ட 18.85 கோடி இலங்கை கரன்சி (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 லட்சம்) பணத்தை போராட்டக்காரர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
அந்த பணம் நேற்று கொழும்பில் உள்ள நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
அதே நேரத்தில் அதிபர் மாளிகையிலும், பிரதமரின் மாளிகையிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சவின் ராஜினாமாவை எதிர்பார்த்துக் காத்திருக்கினறனர். அவர் எழுத்துபூர்வமாக அதை ஒப்படைத்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து விலகுவார்கள் எனத் தெரிகிறது” என்றார்.
இதுகுறித்து போராட்டம் நடத்தும் ஒருவர் கூறும்போது, “எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. உடனடியாக எழுத்துபூர்வமாக கோத்தபய தனது ராஜினாமாவை தர வேண்டும். அதன் பின்னர் இங்குள்ள அரசு கலைக்கப்பட வேண்டும். அதுவரை மாளிகையை விட்டு விலக மாட்டோம்” என்றார்.
இந்நிலையில் 20-ம் தேதி இலங்கையின் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என்று நாட்டின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “தற்போதைய அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலகவுள்ளனர். இதைத் தொடர்ந்து 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார். இந்த முடிவு இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது” என்றார்.
100 கோடி டாலர் கடன்
இதனிடையே இந்தியாவிடம் 100 கோடி அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்காக இலங்கையின் மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT