Published : 10 Jul 2022 02:26 AM
Last Updated : 10 Jul 2022 02:26 AM

ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார் கோத்தபய ராஜபக்ச - இலங்கை சபாநாயகர் தகவல்

கொழும்பு: அதிபர் பதவியில் ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்ச ஒப்புக்கொண்டார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேற்று கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்படுவதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து தொடர்ந்து பிரதமர் ரணில் தனிப்பட்ட இல்லத்தை அவர்கள் முற்றுகையிட தொடங்கினர். போராட்டக்காரர்கள் பிரதமருக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து வீட்டிக்கு தீ வைத்தனர்.

அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்களை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக ஒப்புக்கொண்டார் இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அனைத்துக் கட்சிகளுடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி இருக்கிறார். அதன்படி வரும் புதன்கிழமை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

"அமைதியான மாற்றத்தை உறுதி செய்வதற்காக, ஜூலை 13 ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கூறினார்" என்று அந்நாட்டு தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றிய[போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை வெளிப்படுத்தினார். ஏற்கனவே பிரதமர் ரணில் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இருவரின் ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி நடக்கும் எனத் தெரிகிறது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவே ஆட்சிக்கு தலைமை தாங்குவார் என்று சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x