Published : 08 Jul 2022 07:41 PM
Last Updated : 08 Jul 2022 07:41 PM
கொழும்பு: கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பேரணி நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை.
இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் நாளை பேரணி நடத்த உள்ளனர். இதில் கடந்தமுறை போன்று வன்முறை ஏற்படலாம் என்பதால், ஆயுதங்களுடன் ஆயிரத்துக்கு அதிகமான பாதுகாப்பு படை பிரிவினர் கொழும்புக்கு வந்திறங்கியுள்ளனர்.
இதுகுறித்து உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் கொழும்பு நகரம் வந்திறங்கியுள்ளனர். நாளைய பேரணி வன்முறையாக மாறாது என்று நம்புகிறோம்” என்றார்.
இந்த நிலையில், நாளை நடைபெறும் பேரணியை அமைதியாக நடத்துமாறு இலங்கை மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை வைத்துள்ளது.
இலங்கையி கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT