Published : 05 Jul 2022 09:00 AM
Last Updated : 05 Jul 2022 09:00 AM

அமெரிக்க துப்பாக்கிச் சூடு | அதிநவீன துப்பாக்கியுடன் 22 வயது இளைஞர் கைது; முற்றுப்புள்ளி வைப்பாரா பைடன்?

சம்பவ இடத்தில் குழந்தையின் சைக்கிள். உள்படம் சந்தேக நபர் ராபர்ட் இ க்ரைமோ.

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சுதந்திர தின பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரைப் பறித்த சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 22 வயதே நிரம்பிய அந்த இளைஞரின் பெயர் ராபர்ட் இ க்ரைமோ என தெரியவந்துள்ளது.

சிதறி ஓடிய பொதுமக்கள்: அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்கவர் அணிவகுப்பு, குழந்தைகளின் கொண்டாட்டம், இசை நிகழ்ச்சிகள் என அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது. அப்போது ஏதோ ஒரு உயரமான மாடியிலிருந்து திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. என்ன நடக்கிறது என உணர்வதற்குள் பலரும் ரத்த வெள்ளத்தில் சரிகின்றனர். பீதியில் மக்கள் அங்குமிங்கும் ஓடுகின்றனர். உடனடியாக போலீஸ் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்து பொதுமக்களுக்கு உதவுகிறது. துப்பாக்கிச் சூடு எங்கிருந்து நடத்தப்படுகிறந்து என்பதைக் கண்டுகொண்ட போலீஸார் உடனே அந்த சந்தேக நபரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

— Read Wobblies and Zapatistas (@JoshuaPotash) July 4, 2022

தி லேக் கவுன்ட்டி ஷெரீஃப் (போலீஸ் உயர் அதிகாரி) இது குறித்து கூறுகையில், துப்பாக்கிச் சூடு சரியாக காலை 10.14 மணிக்கு நடந்தது. க்ரைமோ என்ற இளைஞரை நாங்கள் மடக்கிப் பிடித்துள்ளோம். அவரிடமிருந்து பயங்கர சக்தி கொண்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இறந்தவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். குழந்தைகள் உள்பட பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பக இணையதளத்தில் அமெரிக்காவில் ஆண்டுக்கு 40,000 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோ சுதந்திர தின விழாவில் நடந்துள்ள இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த எமிலி ப்ரசாக் என்ற இளம் பெண், நாங்கள் பேரணிக்காக தயார் செய்து கொண்டிருந்தோம். திடீரென மக்கள் அங்குமிங்கும் ஓடினர். எனக்கு ஏதோ வெடிச் சத்தம் கேட்டது. முதலில் நான் அது பட்டாசு என நினைத்தேன். அப்புறம் தான் விபரீதம் புரிந்தது என்றார்.

இதுவரை 309 துப்பாக்கிச்சூடு; என்ன செய்யப்போகிறார் பைடன்? அமெரிக்காவில் 2022 தொடங்கியதிலிருந்து இதுவரை 309 மாஸ் சூட்டிங் சம்பவங்கள் நடந்துள்ளன. துப்பாக்கி வன்முறை நாட்டில் ஒரு தொற்றுநோய் போல் பரவுகிறது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயமாக துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் தான் அதிபர் பைடன் துப்பாக்கி பாதுகாப்பு மத்திய சட்டத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக உச்ச நீதிமன்றம், அமெரிக்க மக்கள் தற்காப்புக்காக பொது இடத்திற்கு கைத்துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி உண்டு எனத் தெரிவித்திருந்த நிலையில் அதிபர் பைடன் துப்பாக்கி சட்டத்திருத்தத்தில் கையெழுத்திட்டார். கடந்த மே 10 ஆம் தேதி சூப்பர்மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கறுப்பினத்தவர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூயர்க்கில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x