Published : 02 Jul 2022 08:43 AM
Last Updated : 02 Jul 2022 08:43 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக கிளினிக் சென்ற தகவல் லொகேஷன் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் அண்மையில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியல் சாசன உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது. கருக்கலைப்புக்கு தடை விதிப்பது குறித்து அந்தந்த மாகாண அரசுகளே முடிவு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், கருக்கலைப்பை அனுமதிக்கும் மாகாணங்களுக்கோ அல்லது அண்டை நாடுகளுக்கோ செல்ல விரும்பும் தங்களின் ஊழியர்களுக்கு விடுப்பு, பயணச் செலவு என பல்வேறு சலுகைகளை அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், தேடுபொறி நிறுவனமான கூகுள், கருக்கலைப்புக்காக மருத்துவமனை செல்வோரின் சேர்ச் ஹிஸ்டரியில் இருந்து அந்த குறிப்பிட்ட தகவல் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது.
"எங்களின் தேடுபொறியில் யாரேனும் கருக்கலைப்பு கிளினிக், வெயிட் லாஸ் கிளினிக், போதை மறுவாழ்வு மையம், ஃபெர்டிலிட்டி மையம் ஆகியனவற்றிற்கு சென்றிருந்தது தெரிந்தால் நாங்கள் அந்தத் தகவலை நிரந்தரமாக சேர்ச் ஹிஸ்டரியில் இருந்து நீக்கிவிடுவோம். இது இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரும்" என்று கூகுளின் மூத்த துணை தலைவர் ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டம் வந்தபின்னர் மகளிர்நல செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இயந்திரங்கள் இதுபோன்ற கருக்கலைப்பு கிளினிக்குக்கு சென்றவருதல் தகவலை நிரந்தரமாக நீக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்தத் தகவலைக் கொண்டு விசாரணை அமைப்புகள் தனிநபர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கலாம் என்பதால் இந்த சலுகையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தான் கூகுள் இந்த மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டம் வருவதற்கு முன்னதாகவே ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் தாங்கள் கருத்தரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த தேடல் வரலாற்றை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதமே கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT