Last Updated : 28 May, 2016 02:44 PM

 

Published : 28 May 2016 02:44 PM
Last Updated : 28 May 2016 02:44 PM

புதிய ரகசியம்: அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம்-மின் சித்தி

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சலவைக் கடை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவ்வப்போது சுவாரஸ்ய ரகசியங்கள் வெளியாகும். அந்த வகையில் தற்போது கிம்-மின் சித்தி குறித்து ஒரு ரகசியத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிம் ஜோங் உன்னின் தாயார் கோ யோங் ஹுயி-ன் சகோதரி கோ யோங் சுக் கடந்த 1998-ல் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிம் ஜோங் உன் ஸ்விட்சர்லாந்தில் படிக்கும் போது அவரது சித்தி பராமரிப்பிலேயே இருந்திருக்கிறார்.

வாஷிங்டன் போஸ்டுக்கு கிம்மின் சித்தி அளித்த பேட்டியில், "பள்ளிப் பருவத்தில் கிம் எந்த தொந்தரவும் அளித்ததில்லை. ஆனால் அவனுக்கு எதிலும் பொறுமை இருக்காது. கூடவே முன் கோபமும் அதிகம். அவரது அம்மா எப்போதும் விளையாடாமல் பாடத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துவார். ஆனால், அப்போதெல்லாம் கிம் கோபத்தில் அவரது தாயுடன் பேசாமல் அமைதி காப்பார். உண்ணாவிரதம் இருப்பார்.

கிம்முக்கு கூடைப்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம். கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் மிகப்பெரிய விசிறி. எனது மகனும் கிம்மும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே வயது. கிம் அதிபர் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 27. கிம்முக்கு தான் வடகொரியாவின் அதிபராகப்போவது அவரது 8-வது பிறந்தநாளிலேயே தெரிந்துவிட்டது" என்றார்.

அமெரிக்காவுக்கு சென்றது ஏன்?

கிம்மின் சித்தி எதற்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார் என்பது இதுவரை ரகசியமாகவே இருக்கிறது. ஆனால், அமெரிக்காவுக்கு அவர்கள் வந்த நாள் முதல் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அவர்களுக்கு நிதியுதவி முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சிஐஏ எல்லா உதவிகளையும் செய்தாலும் வட கொரியா குறித்த எந்த ரகசியத்தையும் நாங்கள் இதுவரை கசியவிடவில்லை என்கிறார் கோவின் கணவர் ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x