Published : 25 Jun 2022 05:55 PM
Last Updated : 25 Jun 2022 05:55 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்புச் சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்செல்லா பேச்லெட் கூறும்போது, “அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு பெரிய பின்னடைவு. பெண்களின் மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்கு பெரும் அடியாகும்” என்று தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரேஸ், “கருக்கலைப்புக்கு தடை விதிப்பது. கருக்கலைப்பு செய்வதை எந்த விதத்திலும் தடுக்கப் போவதில்லை. இந்தத் தீர்ப்பு ஆபத்தைத்தான் விளைவிக்கும்” என்று தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறும்போது, “பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பெண்களின் உரிமைகளை அமெரிக்கா பாதுகாக்கும் என்று நினைத்திருந்தேன்” என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் மக்ரோன், “ கருக்கலைப்பு என்பது பெண்களுக்கான அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். நிச்சயம் அவை பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள பெண்கள் பக்கத்தில் நானிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “இது பெரிய, பின்னோக்கிய நகர்வு என்று நான் நினைக்கிறேன். பெண்கள் தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு என்று நான் எப்போதும் நம்புகிறேன். அந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்தத் தீர்ப்பு கொடுமையானது. அரசாங்கமோ, அரசியல்வாதியோ அல்லது ஆணோ ஒரு பெண்ணிடம் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று கூறக்கூடாது. உங்கள் தேர்வு உரிமைக்காக நாங்கள் எப்போதும் எழுந்து நிற்போம் என்பதை கனடாவில் உள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...