Published : 16 Jun 2022 02:16 PM
Last Updated : 16 Jun 2022 02:16 PM
மாஸ்கோ: “உக்ரைன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து இல்லாமல் போகலாம்” என்று ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
”ரஷ்யாவின் ஏவுகணைகள், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் நகரில் கடைசி பாலத்தையும் ரஷ்ய படைகள் தகர்த்தபின், அங்குள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. தற்போது டான்பாஸ் நகரை கைப்பற்ற ரஷ்யா விரும்புகிறது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்கள் தேவை” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரஷ்யாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், உக்ரைன் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து டிமிட்ரி மெத்வதேவ் கூறும்போது, “உக்ரைன் தனது முதலாளிகளிடமிருந்து வரும் 2 ஆண்டுகளில் டெலிவரிக்கான கட்டணத்துடன் எல்என்ஜியைப் பெற விரும்புகிறது என்று ஓர் அறிக்கையைப் பார்த்தேன். உக்ரைனின் இந்தத் திட்டம் உடைந்துவிடும். முதலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா?அமெரிக்கர்களுக்கு அதை பற்றி கவலையில்லை. அவர்கள் 'ரஷ்யா எதிர்ப்பு' திட்டத்தில் மிகவும் முதலீடு செய்கிறார்கள், மற்ற அனைத்தும் அவர்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT