Published : 11 Jun 2022 05:17 AM
Last Updated : 11 Jun 2022 05:17 AM
துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன்காரணமாக 1999-ம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்த முஷாரப், 2001-ம் ஆண்டு ஜூனில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். 2008 ஆகஸ்ட் வரை அவர் பதவியில் நீடித்தார். ராணுவ தளபதி பதவியையும் தன் வசமே வைத்திருந்தார்.
ராணுவத் தளபதியாக முஷாரப் இருந்தபோது காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதன்காரணமாக 1999-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
எதிர்க்கட்சிகள், மக்களின் போராட்டம் காரணமாக 2008 ஆகஸ்ட் 18-ம் தேதி முஷாரப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அப்போது பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரபை கைது செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.
உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அவர் அனுமதி கோரினார். நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் 2016-ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேறினார்.
இதனிடையே, பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. எனினும் 2016-க்கு பிறகு முஷாரப் பாகிஸ்தான் திரும்பவில்லை.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசித்து வரும் முஷாரப், நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து முஷாரப் குடும்பத்தினர் ட்விட்டரில் நேற்றுவெளியிட்ட பதிவில், “அமிலோய்டோசிஸ் பாதிப்பு காரணமாக கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் முஷாரப் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் உடல் உறுப்புகள் செயல்படாததால் மீண்டு வருவது கடினம் என்று தெரிகிறது. அவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT