Published : 10 Jun 2022 08:32 PM
Last Updated : 10 Jun 2022 08:32 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. உடல் உறுப்புகள் செயலிக்கும் தருணத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் பர்வேஸ் முஷரஃப் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டு பின்னர் நீக்கின.
பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.
முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் முஷாரப் உடல் நிலை மோசமாகி தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT