Published : 04 Jun 2022 04:58 PM
Last Updated : 04 Jun 2022 04:58 PM
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த ஆண்டு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
தலிபான் எதிர்ப்புக் குழுவினர், முந்தைய ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேடித்தேடி பழி தீர்க்கப்படுகின்றனர். தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை குழுவினர் நேற்று ஆப்கன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள அந்த நாட்டுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை மேற்பாா்வையிடுவதற்காக சென்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
பேச்சுவார்த்தை
‘‘ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிப் பொருள்களின் விநியோகத்தை மேற்பாா்வையிடுவதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கான வெளியுறவு அமைச்சக பிரதிநிதி ஜெ.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தானில் மூத்த தலிபான் அமைப்பினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மனிதாபிமான உதவிப் பொருள்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அந்தக் குழுவினா் சந்தித்தனர்’’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையி்ல தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா இதுவரை மனிதாபிமான உதவி அடிப்படையில் 20,000 மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5,00,000 தவணை கரோனா தடுப்பூசிகள், குளிா்கால ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை ஆப்கனுக்கு அனுப்பியுள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர, மேலும் பல மருந்துகள் மற்றும் உணவு தானியங்களை ஆப்கனுக்கு வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் ஆப்கன் அகதிகளுக்கு செலுத்துவதற்காக 10 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை ஈரானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. மேலும், யுனிசெஃப்புக்கு 6 கோடி டோஸ் போலியோ சொட்டு மருந்துகள் மற்றும் 2 டன் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த உதவிகள், ஆப்கன் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
தலிபான்களின் கோரிக்கை
அதன் தொடா்ச்சியாகவே, இந்தியக் குழு காபூலில் மூத்த தலிபான் அமைப்பினரைச் சந்தித்ததாக வெளியறவு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்த சந்திப்பில் வேறு சில முக்கிய விஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நான்கு முக்கிய பிரச்சினைகள் தலிபான்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
முதலாவதாக ஆப்கனில் ராஜீய உறவுகளை இந்தியா மீண்டும் தொடங்க வேண்டும், இதற்காக இந்திய தூதரகத்தை திறக்க வேண்டும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் பக்துன்வாகா மாகாணத்தில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானை சமாளிக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என தலிபான்கள் கோரியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் உறவு மோசமடைந்து வரும் நிலையில் உணவு தானியங்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்தியா உதவ வேண்டும். இதற்கான வர்த்தக உடன்படிக்கையை செய்ய இந்தியா முன்வர வேண்டும் என்றும் அதுபோலவே கடும் நிதிநெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆப்கனில் தொழில்கள் தொடங்க இந்தியா உதவ வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என தலிபான்கள் கேட்டுக் கொண்டனர்.
இதுமட்டுமின்றி மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் உதவிகளை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா ஏற்குமா?
ஆனால் இதனை ஏற்பதில் இந்தியாவுக்கு சில சிக்கல்கள் உள்ளன. கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை இந்தியா மறக்கவில்லை. ஆப்கானிஸ்தானை முன்பு தலிபான்கள் கைபற்றியபோது பல சிக்கல்களை இந்தியா சந்தித்தது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஆப்கனில் செய்துள்ளது. இந்த முதலீடுகளைப் பாதுகாக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களின் நல்லெண்ணத்தைத் தக்கவைக்கவும் இந்தியா விரும்புகிறது.
1990களில் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியது.
ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன்-தலிபான் ஆட்சியின் போது இந்தியாவும் காஷ்மீரில் வன்முறை அதிகரித்தது. இதுபோன்ற வரலாறு மீண்டும் திரும்பாது என்றும் தலிபான்கள் இந்தியாவிற்கு எதிரான குழுக்களுக்கு ஆதரவை வழங்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
தலிபான்கள் என்றென்றும் பாகிஸ்தானின் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பதும் இந்தியாவிற்கு எதிராக இருப்பதும் மாற வேண்டும், அப்போது மட்டுமே தலிபான்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்புண்டு என்று இந்திய தரப்பில் சொல்லப்பட்டது.
பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள தலிபான்களின் நடவடிக்கை, ஆண்களுக்கு மட்டுமேயான ஆட்சியாக இருக்கும் நிலையில் தூதரக உறவை தொடங்க இந்தியா அவசரப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT