Published : 31 May 2022 08:25 AM
Last Updated : 31 May 2022 08:25 AM
புற்றுநோய் முற்றிவிட்டதால் ரஷ்ய அதிபர் புதின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல், அதிபர் புதினுடன் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு சமீபத்தில் காணொலி காட்சி மூலம் போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் மேசையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த புதின் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மற்றுமொரு அண்மைத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இண்டிபெண்டன்ட் இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அந்த உளவாளி கூற்றின்படி, ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவர் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணித்துள்ளதாகவும் அந்த உளவாளி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வாழும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவ், ரஷ்ய அதிபரின் புதினின் உடல்நிலை சரியில்லை என்பதை உறுதி செய்துள்ளதும் அச்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அதிபர் புதினுக்கு தலைவலி ஏற்படுவதாகவும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏதாவது வாசிக்க நேர்ந்தால் அதை மிகப்பெரிய எழுத்துகளாக தாளில் எழுதினாலே அவரால் படிக்க முடிகிறது. அதாவது ஒரு பக்கத்தில் இரண்டே வாக்கியங்கள் என்ற அளவில் வார்த்தைகளை பெரிதாக எழுதினாலே அவரால் அதை வாசிக்க முடிகிறது. அவரது கண் பார்வை நாளுக்கு நாள் மங்கி வருகிறது என்று news.com.au. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் இதுபோன்ற எந்த ஒரு உபாதையும் அதிபர் புதினுக்கு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
போர் நிலவரம் என்ன? அதிபர் புதினின் உடல்நிலை பற்றிய மர்ம அறிக்கைகள் அவ்வப்போது வந்து செல்லும் சூழலில் உக்ரைன் மீதான தாக்குதல் ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கார்கிவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு செய்துவந்த சூழலில் தற்போது அங்கு தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT