Published : 31 May 2022 07:05 AM
Last Updated : 31 May 2022 07:05 AM

நேபாளத்தில் விமான விபத்து: உயிரிழந்தவர்களில் 21 பயணிகளின் உடல்கள் இதுவரை மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியில் இருந்து இதுவரை 21 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள ஊழியர்கள் என 22 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதலுக்குப் பின்னர் விமானம் இமயமலை தவளகிரி சிகரம் அருகே பனிபடர்ந்த மலையடிவாரப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டம் கோவாங் கிராமத்திலுள்ள மலையில் மோதி லாம்சே ஆற்று முகத்துவாரத்தில் விமானம் விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மலையேறும் வீரர்கள், ராணுவ வீரர்கள், மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். பனி சூழ்ந்த பகுதியாக இருந்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கின. விமானத்தின் பாகங்கள், பயணிகளின் உடல்கள், அவர்களின் உடைமைகள் உள்ளிட்டவற்றை மீட்புப் படை வீரர்கள் சேகரித்தனர்.

இதனிடையே விமானம் விழுந்த இடம் தொடர்பாக நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாராயண் சில்வால் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப் பதாவது:

நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது. சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் எங்கள் மீட்பு படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். மலையில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் விழுந்துள்ள விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விமானத்தில் பயணம் செய்த 22 பேரில் 21 பயணிகளின் உடல்களை மீட்டுவிட்டோம். எஞ்சியுள்ள ஒருவரின் உடலை மீட்கும் பணி நடைபெற்றுவருகின்றது. விபத்து நடந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இருந்தபோதும் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது’’ என்றார்.

14,500 அடி உயரத்தில் நடந்த சோகம்

விமானத்தில் பயணம் செய்து இறந்த 22 பேர் அடங்கிய பட்டியலை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதில் 4 இந்தியர்களும் அடங்குவர்.

அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் புணேவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், மகன் தனுஷ், மகள் ரித்திகா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இவர்கள் நேபாள நாட்டிலுள்ள கோயில்களை தரிசிக்க சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வைபவி பண்டேக்கர் புணேவைச் சேர்ந்தவர். இவர் மும்பை பாந்த்ராவிலுள்ள தனது தாயாரின் சொந்த வீட்டில் கணவன், குழந்தைகளுடன் வசித்து வந்தார். தற்போது வைபவியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளார்.

வைபவி பாந்த்ராவில் உள்ள தனியார் நிறுவனத்திலும், அசோக், புவனேஸ்வரிலுள்ள ஒரு மனித வளத்துறை ஆலோசக நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். அசோக்குக்கு போரிவல்லி பகுதியில் வேறு ஒரு சொந்த வீடு உள்ளது. மகன் தனுஷ் பொறியியல் பட்டதாரி ஆவார். ரித்திகா பள்ளிப்படிப்பு படித்து வந்தார். முஸ்டாங் மாவட்டம் தசாங் பகுதியிலுள்ள சனோஸ்வேர் பிர் பகுதியில் விமான பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. இது கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் உள்ள பகுதியாகும். இதுவரை அங்கிருந்து 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களைத் தேடும் பணி சிறிய ரக ஹெலிகாப்டர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x