Published : 30 May 2022 12:51 PM
Last Updated : 30 May 2022 12:51 PM
டெக்சாஸ்: "துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக ஏதாவது செய்யுங்கள்" என்று அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க மக்கள் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, ராப் தொடக்கப்பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொல்லப்பட்ட குழந்தைகளின் படத்திற்கு மலர் வளையம் வைத்து இரங்கல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை அருகிலிருந்த சர்ச் ஒன்றில் நேரில் சந்தித்தார். அப்போது ஒரு பகுதியில் நின்றுக் கொண்டிருந்த கூட்டத்தினர் பைடனை நோக்கி ”ஏதாவது செய்யுங்கள். துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க ஏதாவது செய்யுங்கள்” என்று குரல் எழுப்பினர். அப்போது பைடன் அவர்களை நோக்கி ”நாங்கள் செய்வோம்..” என்று பதிலளித்தார்.
மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து டெல்வார் பல்கலைகழகத்தில் பைடன் பேசுகையில், “ டெக்சாஸில் உள்ள அந்த ஆரம்பப் பள்ளி வகுப்பறையிலும், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாம் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக வலுவாக நிற்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் அமெரிக்காவை பாதுகாப்பானதாக மாற்ற முடியும்” என்றார்.
அமெரிக்காவில் 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்க முடியும். ஆயுதங்கள் இவ்வாறாக அனைவருக்கும் கிடைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதுவும் டெக்சாஸ் சம்பவத்துக்குப் பின்னர் இந்தக் குரல் வலுத்துள்ளது. முன்னாள் அதிபர் ஒபாமா கூட அரசு இதில் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT