Published : 26 May 2022 02:53 PM
Last Updated : 26 May 2022 02:53 PM
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டே நகரில் ராப் என்ற பெயரில் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 600 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி வளாகத்துக்கு நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் பயந்து போன மாணவர்கள் அலறியடித்தபடி வெளியே தப்பியோடினர்.
அந்த இளைஞர் சரமாரியாக சுட்டதில் பல மாணவர்கள் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். மேலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் இறந்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆசிரியர்கள் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சால்வடர் ரொலாண்டோ ராமோஸ் என்ற அந்த இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர்தான் அப்பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. அதில், விருதுகள் பெற்ற குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் 7 முதல் 10 வயதுக்குட்டப்பட்டவர்கள்.
அமிரியா ஜோ கர்சா: கொல்லப்பட்ட குழந்தைகளில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் இவர்தான். கொல்லப்பட்ட நாள் சிறந்த மாணவிக்கான விருதை வாங்கி இருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமிரியா தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். கொல்லப்படுவதற்கு முன்னர் அமிரியா பள்ளியில் இருந்த தொலைபேசி வழியே போலீஸாரை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்.
சேவியர் லோபஸ் (10): “மிகவும் மகிழ்வான சிறுவன். அவனின் இறப்புச் செய்தி எங்களை நிலைகுலையச் செய்துள்ளது” என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
உசியா கார்சியா (8): "மிகவும் அன்பானவன், கால்பந்தாட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன்" என்று உசியாவின் தாத்தா தெரிவித்திருக்கிறார்.
அனபெல்லா: “அனபெல்லா இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறாள். மகிழ்ச்சியானவள்... அனைவரையும் மகிழ்விப்பாள். நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று அவருடைய உறவினர்கள் பதிவிட்டுள்ளனர்.
இவர்களுடன் 19 குழந்தைகள் இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈவா மிரேல்ஸ், இர்மா கார்சியா என்ற இரு ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாணவர்களை காக்கும் முயற்சியில் இருவரும் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த 2012-ஆம் ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் பத்து வருடங்களுக்குப் பிறகு மிகவும் மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT