Published : 25 May 2022 04:57 PM
Last Updated : 25 May 2022 04:57 PM

குடும்பச் சண்டை, பள்ளியில் துன்புறுத்தல்... - 22 பேர் உயிரைப் பறித்த அமெரிக்க இளைஞரின் பின்புலம்

வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்நிலையில், அந்த இளைஞன் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.

சால்வடர் ரொலாண்டோ ராமோஸ் என்ற அந்த 18 வயது இளைஞர் பற்றி அவருடன் பணியாற்றிவர்கள், அவரது பள்ளியில் படித்தவர், அவர் குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் எனப் பலரும் பல தகவல்களை சொல்லியுள்ளனர்.

அவரது உறவினர்களும், நண்பர்களும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், "ரொலாண்டோ எப்போதுமே தனித்தே இருப்பான். சிறுவயதில் பேசுவதில் இருந்த சிக்கலால் பள்ளியில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறான். மேலும், வீட்டிலும் சண்டை, சச்சரவுகள் இருந்துள்ளன. பள்ளியில் இருந்த துன்புறுத்தல் காரணமாகவே பாதியில் பள்ளிப் படிப்பை கைவிட்டான்" என்று தெரிவித்தனர்.

ரொலாண்டோவின் தாய் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் அவருக்கும் ரொலாண்டோவுக்கும் இடையே அதிகமான சண்டை நடந்துள்ளது என்றும் செய்தித்தாள்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதள பதிவுகள்: கடந்த 4 நாட்களாக ரொலாண்டோ சமூக வலைதளங்களில் துப்பாக்கிகள் பற்றி அதிகமான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இரண்டு துப்பாக்கிகளின் புகைப்படத்தை பகிர்ந்து "மை கன் பிக்ஸ்" என்று பதிவிட்டிருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்னரும் சில ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளின் படங்களைப் பகிர்ந்து "இவற்றை வாங்க ஆசைப்படுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் அவர் பதிந்த சில பதிவுகள் துப்பாக்கிச் சூடுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதில், ஒரு பெண்ணுக்கு அனுப்பிய மெசேஜில், "நான் ஒரு சின்ன ரகசியத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறி, வாயை மூடியிருக்கும் ஸ்மைலி இமோஜியை பகிர்ந்திருந்தார்.

பின்னர், "நான் அதை செய்யப்போகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்தப் பெண், "என்ன செய்யப்போகிறாய்?" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ரொலாண்டோ, "நான் 11 மணிக்கு முன்னர் சொல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். கடைசியாக காலை 9.16 மணிக்கு பதிவு செய்துள்ளார். 11.32 மணிக்கு பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

ரொலாண்டோ பயன்படுத்திய துப்பாக்கியை தனது 18-வது பிறந்தநாளில் வாங்கியுள்ளார். அமெரிக்காவில் 18 வயது நிரம்பிய நபர்கள் யாராக இருந்தாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். ஆயுதங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x