Published : 25 May 2022 03:21 PM
Last Updated : 25 May 2022 03:21 PM
டெக்சாஸ்: அமெரிக்காவில் பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிக பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நியூயார்க்கின் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர். இந்தத் துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது செயல்பட வேண்டிய நேரம். துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்களிடம், ஒரு தேசமாக, நாம் எப்போது துப்பாக்கி லாபிக்கு எதிராக நிற்கப் போகிறோம் என்று கேட்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை பள்ளிகளில் நடத்தப்பட்ட மோசமான துப்பாக்கிச் சூடுகள்
ராப் எலிமெண்டரி பள்ளி, மே 2022
டெக்சாஸில் உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார்.
சாண்டா ஃபே உயர்நிலைப்பள்ளி, மே 2018
ஹூஸ்டன் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 17 வயது இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள்.
மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளி, பிப்ரவரி 2018
புளோரிடாவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளியில் நடந்த தாக்குதலில் 14 மாணவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுதக்க நபர் கைது செய்யப்பட்டார்.
UMPQUA - சமூக பள்ளி , அக்டோபர் 2015
ஓரிகானின் ரோஸ்பர்க்கில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், பின்னர் தன்னைத்தானே அந்த நபர் சுட்டுக் கொண்டார்.
சாண்டி ஹூக் எலிமெண்டரி பள்ளி , டிசம்பர் 2012
நியூடவுனில் உள்ள வீட்டில் 19 வயது இளைஞன் தனது தாயைக் கொன்றுவிட்டு, அருகிலுள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் தன்னை தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.
வர்ஜீனியா டெக், ஏப்ரல் 2007
வர்ஜீனியாவில் உள்ள வளாகத்தில் 23 வயது மாணவன் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இளைஞன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.
ரெட் லேக் உயர்நிலைப்பள்ளி, மார்ச் 2005
ஒரு 16 வயது மாணவர், தனது தாத்தாவையும் அவரது துணையையும் கொன்றுவிட்டு, அருகிலுள்ள ரெட் லேக் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு அவர் ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு காவலாளியைக் கொன்றான்
கொலம்பைன் உயர்நிலைப்பள்ளி, ஏப்ரல் 1999
கொலராடோவின் லிட்டில்டனில் உள்ள பள்ளியில், இரண்டு மாணவர்கள் தங்களுடன் பயின்ற 12 மாணவர்களை கொன்றனர்.
அமெரிக்காவை உலுக்கிய 8 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இவைதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT