Published : 25 May 2022 06:50 AM
Last Updated : 25 May 2022 06:50 AM

படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்யும் முயற்சி கடந்த, பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பின் காகாசஸ் என்ற பகுதியில் நடந்ததாக உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. இருதரப்பினர் இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து வதந்திகளும் வெளியாகின்றன. அவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. அதன்பின் புதினுக்கு அடிவயிற்றில் தேங்கிய நீரை அகற்ற, அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்டது.

அவரை படுகொலை செய்ய, பிப்ரவரி 24-ம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வெற்றி பெறவில்லை எனவும் உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடாநவ் தற்போது கூறியுள்ளார். இந்த தாக்குதல் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு இடையே காகாசஸ் என்ற பகுதியில் அங்கிருக்கும் நபர்களால் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இவரது முழு பேட்டி உக்ரைன்ஸ்கா ப்ராவ்டா என்ற ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் புதின் படுகொலை முயற்சி சம்பவம் உண்மையா என இன்னும் சரிபார்க்கப்படவில்லை. அனால் புதினை பற்றி பல செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், படுகொலை முயற்சி தகவலும் வெளியாகியுள்ளது.

ரஷ்யான் - உக்ரைன் போர் ஆகஸ்ட் மாதம் மத்தியில் திருப்பு முனையை எட்டும் எனவும், இந்தாண்டு இறுதியில்தான் இப்போர் முடிவுக்கு வரும், இது ரஷ்யாவின் தலைமை மாற்றத்துக்கு வழி வகுக்கும் என ‘ஸ்கை நியூஸ்’ என்ற செய்தி நிறுவனத்துக்கு உக்ரைன் உளவுப் பிரிவு தலைவர் கிரிலோ புடாநவ், இந்த மாத தொடக்கத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதிபர் புதினை பதவியில் இருந்து அகற்ற, ரஷ்யாவில் ராணுவ புரட்சி ஏற்படும் எனவும் அதை தடுத்த நிறுத்த முடியாது எனவும் புடாநவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த 2017-ம் ஆண்டு அளித்த பேட்டியில் தான் 5 படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளதாகவும், தனது பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டதில்லை எனவும் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x