Published : 25 May 2022 07:29 AM
Last Updated : 25 May 2022 07:29 AM

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கு வித்திடுகிறது குவாட் அமைப்பு - டோக்கியோ மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று குவாட் உச்சிமாநாடு நடைபெற்றது. மாநாடு நடைபெறும் வளாகத்துக்கு வரும் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

டோக்கியோ: இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கு வித்திடும் அமைப்பாக குவாட் அமைப்பு உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் 3-வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் முக்கிய அம்சமாக, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

கரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று தடுப்பூசிகளை வழங்கி உறுதுணையாக இருந்துள்ளன. காலநிலை மாற்றம், உணவு விநியோகச் சங்கிலி, பேரிடர் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு என பல வகையிலும் குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் திகழ்வது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை இது உறுதி செய்கிறது. குவாட் கூட்டமைப்பு ஸ்திரமான கொள்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இது இன்னும் வலுவான கூட்டமைப்பாக உருவாகும்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கு வித்திடும் அமைப்பாகவும் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்க அமைப்பாகவும் குவாட் உருவெடுத்துள்ளது. உலக அரங்கில் குறுகிய காலத்தில் முக்கியத்துவமான இடத்தை குவாட் பெற்றுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, ‘‘உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பு உறுதிபூண்டுள்ளது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

ஜோ பைடனுடன் சந்திப்பு

குவாட் மாநாட்டுக்கு் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜோ பைடனுனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறும்போது, ‘‘இந்தியா, அமெரிக்கா கூட்டு நட்புறவு நம்பிக்கையின் அடிப்படையிலானது. இரு நாடுகள் இடையே பொதுவான நலன்கள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் வலுவான நிலையில் அது உள்ளது. இந்திய -அமெரிக்கா தடுப்பூசி நடவடிக்கை திட்டத்தை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஜனநாயக முறையில் இந்தியா வெற்றிகரமாக கையாண்டு உள்ளது. இதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். கரோனா தொற்று நோயை கையாண்ட விதத்தில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனா தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் வெற்றி, ஜனநாயக முறை மூலம் எதையும் வழங்க முடியும் என்பதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டி உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் கூட்டுறவை இந்த பூமியில் மிக நெருக்கமான ஒன்றாக மாற்ற மோடி உறுதிபூண்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து செய்யக்கூடிய விஷயங்கள் அதிகமாக உள்ளன’’ என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சீன, ரஷ்ய போர் விமானங்கள்

குவாட் மாநாடு நடந்த இடத்துக்கு அருகே சீன, ரஷ்ய விமானங்கள் பறந்தன என்று ஜப்பான் புகார் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபுவோ கிஷி கூறும்போது, “அமெரிக்க அதிபர், இந்திய பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் தலைவர்கள் போன்ற உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நடந்த இடம் அருகே சீனா, ரஷ்யாவின் 4 போர் விமானங்கள் பறந்தது கவலை அளிக்கிறது. டோக்கியோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த விமானங்கள் பறந்ததாக தெரிகிறது. இதேபோல் மத்திய ஜப்பான் பகுதிகளிலும் ரஷ்ய விமானங்கள் பறந்தன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு சர்வதேச சமூகம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளராக இருக்கும் ரஷ்யாவுடன் இணைந்து சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாம் அதை கவனிக்காமல் இருக்க முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x