Published : 24 May 2022 09:02 PM
Last Updated : 24 May 2022 09:02 PM

குவாட் உச்சி மாநாடு | ஜப்பானுக்கு அருகே சீன, ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் சலசலப்பு

டோக்கியோ: குவாட் உச்சி மாநாடு நடந்து வரும் வேளையில், ஜப்பான் நாட்டின் வான்பரப்பு எல்லைக்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது? - ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோ - பசிபிக் பெருங்கடலில் சீன தேசத்தின் ஆதிக்கத்தை குறைப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவும், ரஷ்யாவும் இணைந்து போர் விமானத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனை ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் நொபுவோ கிஷி உறுதி செய்துள்ளார்.

குவாட் அமைப்பு ஏன்? - இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு, கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது. கரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநாடு காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. 2-வது உச்சி மாநாடு, கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், குவாட் அமைப்பின் 3-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வருகிறது. குவாட் அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் இரண்டாவவது உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பு.

இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பு: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.

ஜப்பான் கலக்கம்: பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு தொடர்பாக நான்கு நாட்டு தலைவர்களும் ஒன்றாக கூடி பேசி வரும் சூழலில் சீனா - ரஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சியை கண்டு கலக்கம் அடைந்துள்ளது. "நான்கு நாட்டு தலைவர்கள் குவாட் மாநாட்டில் பங்கேற்றுள்ள வேளையில் இது நடைபெற்றுள்ளது. சீனா மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் ஜப்பான் நாட்டின் வான்பரப்பு எல்லைக்குள் நுழைந்து ஏதும் அத்துமீறவில்லை. ஆனால், கடந்த நவம்பரில் இருந்து இது போன்ற சம்பவம் நான்காவது முறையாக நடைபெற்றுள்ளது.

இதில் மொத்தம் நான்கு விமானங்கள் பறந்துள்ளன. அதில் இரண்டு ரஷ்யாவுக்கும், இரண்டு சீனாவுக்கு சொந்தமானதாக தெரிகிறது. இந்த விமானங்கள் கிழக்கு சீன கடல் பகுதியில் இருந்து பசிபிக் பெருங்கடல் வரை பறந்தன. அதோடு ரஷ்ய நாட்டு உளவு விமானம் ஒன்றும் மத்திய ஜப்பான் பகுதியில் பறந்தது.

இது தொடர்பாக நாடு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான பார்வையின் இது தொடர்பாக ஜப்பான் அரசு கவலையை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போரிட்டு வருவதற்கு உலக நாடுகள் அதிருப்தியை தெரிவித்துள்ளன. அப்படிப்பட்ட ரஷ்யாவுடன் இணைந்து சீனா மேற்கொண்ட இந்த செயல் தான் கவலையை கொடுக்க காரணம்" என நொபுவோ கிஷி தெரிவித்துள்ளார்.

பலமுறை தங்கள் எல்லைக்குள் நுழையும் போர் விமானங்களை ஜப்பான் ராணுவம் துரத்தி உள்ளதாகவும் தெரிகிறது. அதில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் சீன விமானங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தனது அண்டை நாடான சீனாவுடன் நட்பு ரீதியிலான போக்கை கடைபிடிக்கவில்லை. இருநாடுகளுக்கு இடையிலும் எல்லை தொடர்பான விவகாரங்களில் முரண் உள்ளது.

ரஷ்யாவின் விளக்கம் என்ன? - சீன H-6K போர் விமானங்கள் மற்றும் ரஷ்ய Tu-95MS போர் விமானங்கள் ஜப்பான், கிழக்கு சீனா மற்றும் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் வழக்கமான கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. விமானங்கள் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே பறந்தன. பிற நாட்டு வான்வெளி எல்லைக்குள் நுழையவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் நான்கு நாட்டு தலைவர்களும் ரஷ்யா மற்றும் சீனாவை மறைமுகமாக எச்சரித்திருந்தனர். அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷ்ய நாடுகளுடன் பனிப்போர் உள்ளது.

— Global Times (@globaltimesnews) May 24, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x