Published : 19 May 2022 12:43 PM
Last Updated : 19 May 2022 12:43 PM
16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோலவே, மகளிர்க்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுமுறை வழங்க வழிவகை செய்துள்ளது. தங்களின் உடல் சார்ந்த முடிவுகளை பெண்கள் சுயமாக எடுப்பதை உறுதி செய்ய இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவின்படி 16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தாங்கள் கருவை சுமக்க விரும்பவில்லை என்றால் சுயமாக முடிவெடுத்து கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியை பெறத் தேவையில்லை. அதேபோல் இந்த புதிய மசோதாவின் படி மகளிர்க்கு மாதவிடாயின் போது கடுமையான வயிற்றுவலி இருக்கும்பட்சத்தில் 5 நாட்கள் வரை விடுமுறை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஆட்சியிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியானது கருக்கலைப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அதிலுள்ள கெடுபிடிகளை தளர்த்தும் வகையில் தற்போது ஸ்பெயின் அரசு புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயினில், தற்போது இடதுசாரி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் கர்ப்ப காலத்தின் 14வது வாரம் வரை கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, புதிய மசோதா மட்டும் சட்டவடிவு பெற்று நடைமுறைக்கு வருமேயானால், ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயின் மட்டுமே மகளிர்க்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்கும் நாடு என்ற அந்தஸ்தைப் பெறும். அதுமட்டுமல்லாது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது கிரிமினல் குற்றமாக கருதப்பட்ட நிலையில் அதன்மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் தங்களின் 39-வது வார கர்ப்பகாலத்தில் இருந்து சம்பளத்துடன் கூடிய விடுப்பை எடுத்துக் கொள்ளலாம். பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார அமைப்புகளில் பெண்களுக்கு இலவசமாக மாதவிடாய் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்துறை அமைச்சர் ஐரீன் மாண்டெரோ, "பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த, மகளிர்க்கான கருக்கலைப்பு உரிமைகளை நிலைநாட்டுவது அரசின் கடமை. பெண்கள் தங்களின் உடல், வாழ்க்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கத் தடையாக இருப்பதை நீக்கி அவர்களின் உரிமையைப் பேணுவதே இந்த அரசின் நோக்கம் என்று கூறினார்.
மேலும் மாதவிடாய் விடுமுறை குறித்து அவர், இன்று நாங்கள், உலகளவில் பாலியல், இனப்பெருக்க உரிமைகளுக்காகப் போராடும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம்" என்றார்.
இது குறித்து நடிகையும், பாடகியுமான கிறிஸ்டினா டியாஸ், "ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வலி கடுமையாக இருக்கும்போது அவர் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் முடிவு மிகச் சிறப்பானது. அவர் வலியுடன் வேலை செய்யாமல் மற்ற நோய்களுக்கு எல்லோரும் விடுப்பு கோருவதுபோல் சகஜமாக விடுப்பு எடுத்து ஓய்வெடுக்கலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...