Published : 18 May 2022 10:36 AM
Last Updated : 18 May 2022 10:36 AM
ஜெனீவா: உலகளவில் கடந்த வாரம் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்,"கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4ல் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. சோதனைகளும், மரபணு பகுப்பாய்வு சோதனைகளும் கூட உலகளவில் குறைந்துள்ளன. இதனால், கரோனா வைரஸ் இப்போது எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது எவ்வாறாக உருமாறி வருகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவில் 1.7 மில்லியன் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது. அங்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிகமாக இருப்பதால் இது கவலையை இன்னும் அதிகரிக்கிறது. வட கொரியாவில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் மக்களுக்கு தீவிர நோய் பாதிப்புகள் ஏற்படுமோ எனத் தோன்றுகிறது" என்றார்.
இதற்கிடையில் வட கொரியா தன் நாட்டில் கரோனா பரவல், மரணங்கள் குறித்த தகவலைப் பகிருமாறு உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
அதேவேளையில் ஜீரோ கோவிட் பாலிஸி என்ற பெயரில் நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட கெடுபிடிகளை கடைபிடிப்பதாக சீனாவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"உலகுக்கு இப்போது கரோனா வைரஸ் பற்றி புரிதல் ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. தடுப்பூசிகள் இருக்கின்றன. இந்நிலையில் பெருந்தொற்று ஆரம்பத்தில் கடைபிடித்த கடுமையான ஊரடங்குகள் இப்போது தேவையில்லை" என்று டெட்ரோஸ் அதோனம் கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நியூயார்க் நகரில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்று அதிகரித்துள்ளது. அதனால், தொற்று நிலையை மிதமானது என்பதிலிருந்து அதிகமானது என்ற நிலைக்கு மாற்றி உத்தரவிடுவதாகக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT