Published : 18 May 2022 08:52 AM
Last Updated : 18 May 2022 08:52 AM
"உக்ரைன் போர் குறித்து சினிமா துறை மவுனம் காப்பது ஏன். 1940ல் ஹிட்லரை பகடி செய்ய ஒரு சார்லி சாப்ளின் இருந்தார். இப்போதைய ஹிட்லரை கேள்வி கேட்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா" என்று ஜெலன்ஸ்கி வினவினார்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒளிபரப்பானது.
"மானிடர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் மாண்டு போவார்கள். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரம் மக்களிடமே வந்து சேரும்.." என்று 'தி கிரேட் டிக்டேட்டர்' படத்தில் சார்லி சாப்ளின் பேசிய இறுதிக் காட்சி வசனத்தை மேற்கோள் காட்டி ஜெலன்ஸ்கி தனது உரையை நிகழ்த்தினார்.
அந்த விழாவில் ஜெலன்ஸ்கி பேசுகையில், "சினிமா மவுனமாகத் தான் இருக்குமா? இல்லை எங்களுக்காக பேசுமா? ஒரு சர்வாதிகாரி இருந்தால், சுதந்திரத்துக்காக ஒரு போர் நடந்தால் அப்போது ஒற்றுமை அவசியம். சினிமா தன்னை இந்த ஒற்றுமை வளையத்தின் வெளியே நிறுத்திக் கொள்ளப் போகிறதா? இல்லை உள்ளே நின்று கேள்வி கேட்கப்போகிறதா?
இரண்டாம் உலகப் போரின் போது 1940ல், சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் "The Great Dictator" திரைப்படம் அடால்ஃப் ஹிட்லரை பகடி செய்தது. அந்த சினிமாவால் உண்மையான சர்வாதிகாரி அழிந்துவிடவில்லை. ஆனால் அப்போதைய சினிமா மவுனமாக இல்லை. அதற்காக நன்றி. இன்றைக்கும் சினிமா உயிர்ப்புடன்தான் இருக்கிறது, மவுனமாகிவிடவில்லை என்பதை நிரூபிக்க இன்னொரு புதிய சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? சினிமா பேசப்போகிறதா? இல்லை மவுனம் காக்கப்போகிறதா?" என்றார்.
பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் விழாவில் ஒளிபரப்பப்பட்ட இந்த பதிவு செய்யப்பட்ட வீடியோவின் முடிவில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
இதற்கு முன்னதாக ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் நடந்த கிராமி இசை விருதுகள் வழங்கும் நிகழ்விலும் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் படைப்பாளிகளுக்கு கவுரவம்: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய கருவாக போர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவின் ஒரு நாள் முழுவதுமாக உக்ரைன் திரைக்கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்படுள்ளது. மரியுபோலிஸ் 2 என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்படுகிறது. இந்த ஆவணப்படத்தை லிதுவேனிய இயக்குநர் மன்டாஸ் க்வேடாராவிசியஸ் இயக்கியுள்ளார். இவர் கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் 2 மாதங்களாக நீடித்து வருகிறது. உலகளவில் இந்தப் போர் மறைமுகமாக பல்வேறு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்புக்கும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் விழாவில் பேசியுள்ளார். அதிபர் ஜெலன்ஸ்கியும் நடிகராக இருந்தே அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...