Published : 18 May 2022 07:30 AM
Last Updated : 18 May 2022 07:30 AM

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் மக்கள் நடமாட்டம் முடக்கம்

பெய்ஜிங்: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2.15 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நாள்தோறும் 1,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வர்த்தக நகரான ஷாங்காயில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் அந்த நகரில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அங்கு 6 வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடிக்கிறது. தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. ஷாங்காயை தொடர்ந்து தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நகரில் நாள்தோறும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

பூஜ்ய கரோனா கொள்கையை சீன அரசு பின்பற்றுகிறது. இதன்படி சீனாவில் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை எட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. யாராவது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால்கூட அவரது குடும்பம், அவரோடு தொடர்புடையவர்கள், அவர் சென்று வந்த இடங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

பேருந்து, ரயில் சேவை நிறுத்தம்

பெய்ஜிங்கின் பிரபல சந்தை, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடம், பேருந்து நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் கரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 இடங்களில் இருந்து 140 பேருக்கு வைரஸ் பரவியிருக்கிறது. வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க இப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது.

பெய்ஜிங் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ரோங் ஜுன் கூறும்போது, "கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பெய்ஜிங்கின் 190 பேருந்து வழித்தடங்கள், 54 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

தலைநகர் பெய்ஜிங்கில் 16 மாவட்டங்கள் உள்ளன. இதில் 12 மாவட்டங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. பெய்ஜிங்கின் பாங்ஷான் மாவட்டத்தில் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்ட மக்கள் வீடுகளை விட்டுவெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி முதல் மாவட்டத்தின் 13 லட்சம் பேரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

வெளியேற தடை

பெய்ஜிங்கில் அமைந்துள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்கள், வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x