Published : 17 May 2022 01:18 PM
Last Updated : 17 May 2022 01:18 PM

இலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு

கொழும்பு: "இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது" என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு மக்களுக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ரணில் விக்ராசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “அடுத்து வரும் இரு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதுகுறித்து பொது மக்களிடம் பொய் கூறுவதற்கு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் கூறுவது உங்களுக்கு விரும்பத்தகாததாகவும், திகிலூட்டுவதாகவும் இருந்தாலும் உண்மை நிலை இதுதான்.

தற்போது நம்மிடம் ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. எனினும் இந்தியக் கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. நுகர்வோருக்கு எரிவாயு சிலிண்டர் வழங்க எங்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசரமாகத் தேவைப்படுகிறது.

நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. மின்பற்றாகுறையை தற்போது உடனடியாக தீர்க்க முடியாததால் ஒரு நாளைக்கு 15 நேரம் மின்சார தடை நீடிக்கும். மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

சவால்களையும், துன்பங்களையும் வரவிருக்கு மாதங்களில் நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இருப்பினும், இது நீண்ட காலத்திற்கு இருக்காது. வரவிருக்கும் மாதங்களில், நட்பு நாடுகள் எங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் ஏற்கெனவே இது தொடர்பான ஆதரவை இலங்கைக்கு வழங்கி உள்ளார்கள்.

கடந்த வியாழனன்று ​​ஓர் அரசியல் தலைவராக மாத்திரமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வியைப் பெற்று பயனடைந்த தேசியத் தலைவராகவும்தான் நான் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டேன். நாட்டிற்கான எனது கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுதான் உங்களுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x