Published : 16 May 2022 09:31 AM
Last Updated : 16 May 2022 09:31 AM
அமெரிக்காவில் 48 மணி நேரத்தில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
முன்னதாக, நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் கலிஃபோர்னியா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆசியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினார், 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. உயிரிழந்தவர், காயமடைந்தவர்கள் என அனைவருமே ஆசியர்களே அதுவும் குறிப்பாக தைவானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரை கயிற்றைக் கொண்டு கட்டிவைத்தனர். சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர்.
இதேபோல் டெக்சாஸ் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இரு தரப்புக்கு இடையே நீடித்துவந்த மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் கையகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்களில் 16 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
கரோனா காலத்தில் அதிகரித்த துப்பாக்கி கலாச்சாரம்: அமெரிக்காவில் துப்பாக்கி வாங்க, வைத்துக் கொள்ள கடுமையாக கெடுபிடிகள் இல்லாத காரணத்தால், அங்கு அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது. கரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவில் மொத்தம் 62,500 துப்பாக்கி பயன்பாடு தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் மரணம் ஏற்படுத்தாத 10,000 காயங்களும், 4,400 மரணங்களும் அதிகமாக பதிவானது. முந்தைய ஆண்டைவிட இது 15% அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றது. தனிநபர்களுக்கு துப்பாக்கி விற்பனையில் கெடுபிடிகளை விதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT